“தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை!” என்பது ஒரு நல்ல பழமொழி. முற்காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும். வீட்டைச் சுற்றி உள்ள மண் பகுதியில் அழகாக பாத்தி கட்டி கீரை பாவி வைப்பார்கள். மேலும் அவரைக்காய்,தக்காளி,பரங்கி,பூசணி,சுரைக்காய்,புடலங்காய்,நார்த்தை,மா,வாழை போன்ற காய்கனிகள் கிடைப்பதற்கு விதை போட்டு செடி, மரம் வளர்ப்பர்.
இந்த விருட்சங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் காய்,கனிகளை உணவு பொருளாக உபயோகபடுத்தி வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தான் முற்கால வழக்கம். நிலம் இருப்பவர்கள் நெல் பயிரிடுவார்கள். நிலம் இல்லாதவர்கள் வயலில் வேலை செய்ததற்கு ஊதியமாக நெல்லை வாங்கி வந்து அதை அரிசியாக்கி, சமைத்து அதோடு வீட்டில் வளர்க்கும் செடிகளில் காய்த்த காய்கறிகளை பறித்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.
பாரதியார் கூட “காணி நிலம் வேண்டும்!” என்று நிலம் தான் கேட்டார். அதில் கேணியுடன் தென்னை மரமும் வேண்டும் என்று வரம் கேட்டார். வள்ளுவர் கூட, உழவுத் தொழிலைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். உழுதவரின் பின்னால் மற்றவர் கை கட்டி தொழுது செல்வர்! என்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால், இக்காலத்தில் நகர்ப்புறங்களில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, வீடுகளாக மாறி வருகின்றன. “காடு நகரமானால், நாடு நரகமாகும்” என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் நாம் வீட்டில் காய்கறி தோட்டம் வைத்தால், உணவு உண்ண வாட்டமில்லை. எனவே தான் “தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை” என்ற பழமொழியைச் சொல்லி வைத்தார்கள்.
நன்றி: தினத்தந்தி

No comments:
Post a Comment