Monday, February 25, 2013

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...



1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யா விட்டாலும் உரிய காலத்தில், அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. புதிய கார்டு வாங்கினால் உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கார்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை (ஓரளவு) தடுக்கும்.

3. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் வங்கியில் புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்ணை எப்பொழுதும் கையில் வைத்திருங்கள். அதோடு கிரெடிட் கார்டு எண்ணையும் வைத்திருக்க மறந்து விடாதீர்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்து கார்டை செயலிழக்க செய்யுங்கள்.

4. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்பொழுது அவசியம் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் பணம் செலுத்த வேண்டும்.

5. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

6. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன் தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பாருங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வங்கிக்கு உடனே புகார் செய்யுங்கள்.

9. அனுமதியின்றி பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை பயனாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

10. வங்கியிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள்.

11. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டு அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின், முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணைப் முறைகேடாக வேறு யாரேனும் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

12. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கதொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்னை வந்தால் அவர்கள் தப்பி விடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்ட நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

13. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் இடையே கிரெடிட் கார்டு சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உங்கள் சம்மதம் இன்றியே உங்கள் பணத்தை வங்கி எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது.

14. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் உள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

15. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி நடைமுறை குறை தீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள்.

வங்கி நடைமுறை குறைதீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
கோட்டைச்சரிவு,
16, இராஜாஜி சாலை,
சென்னை 600001.
தொலைபேசி: 044-25395487,
இணைய முகவரி: www.bankingombudsman.rbi.org.in

Friday, February 22, 2013

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் எடுப்பதற்கு தேவைப்படும் ‘Annexure A’ படிவம்


பாஸ்போர்ட் எடுப்பதற்கு பல ஆவணங்கள் நாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று பிறப்பு சான்றிதழ். சிலசமயம் நம்மிடம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். உதரணமாக பள்ளி சான்றிதழும் இல்லாமல் முனிசிபாலிட்டி சான்றிதழும் இல்லாமல் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இந்த ஆவணங்களுக்கு மாற்றாக அரசு ‘Annexure A’ என்ற படிவத்தை அனுமதித்து இருக்கிறது. இந்த ‘Annexure A’ படிவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த படிவ மாதிரியை http://passportindia.gov.in என்ற வலை தளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். இந்த படிவத்தை குறைந்த பட்ச நீதித்துறை சாராத முத்திரை தாளில்(Non- Judicial Stamp Paper)  அச்சடித்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி நோட்டரி பப்ளிக் (Notary Public) சான்று பெற வேண்டும். நோட்டரி பப்ளிக் என்பவர் ஒரு அட்வகேட் / வக்கீல். மாவட்ட நீதி மன்றங்களில் நீங்கள் நோட்டரி பப்ளிக்கை அணுகலாம். அவர்களே நாம் கொண்டு செல்லும் ஆவணத்தில் சான்றளித்து முத்திரையிட்டு(Stamp) கொடுப்பார்கள். இதற்காக நோட்டரி பப்ளிக் உண்டான தொகையை கொடுக்க வேண்டும். கோர்ட் அருகமையிலேயே நீங்கள் ஆவணத்தை டைப் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கீழே காட்டப்பட்டுள்ளது ‘Annexure A’ -வின் மாதிரி.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, February 9, 2013

இணையத்தில் பட்டா, சிட்டா விபரங்கள் பார்வையிட

தமிழ் நாட்டிலுள்ள நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்கள் மற்றும்  அ பதிவேட்டின் விவரங்களை இப்போது இணையத்தில் காணலாம். முன்னர் இதற்காக நாம் தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இணையத்தில் எளிதாக பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

பின்வரும் முறையில் எளிதாக நீங்கள் இதை செய்யலாம். கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://taluk.tn.nic.in/eservicesnew/home.html

அம்புக்குறியிட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.


கீழ் உள்ள பக்கத்தில் பின்வரும் விவரங்களை கொடுக்கவும்.
-மாவட்டம்
-வட்டம்
-கிராமம்
-பட்டா எண்
-உட்பிரிவு எண்

பட்டா எண், புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உங்கள் நிலப்பத்திரத்தில் பார்த்துக்கொள்ளவும்.விவரங்களை கொடுத்து சமர்ப்பி என்ற சுட்டியை கிளிக் செய்தவுடன் பின்வரும் பட்டா கிடைக்கப்பெறும்.

மேலும் நீங்கள் அதனடியில் உள்ள Print என்ற link-ஐ சொடுக்கி பட்டாவை பிரதி எடுத்துக் கொள்ளலாம்.