Friday, December 16, 2011

இதயம் தொட்ட பழமொழிகள் பகுதி 1



தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை!என்பது ஒரு நல்ல பழமொழி. முற்காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும். வீட்டைச் சுற்றி உள்ள மண் பகுதியில் அழகாக பாத்தி கட்டி கீரை பாவி வைப்பார்கள். மேலும் அவரைக்காய்,தக்காளி,பரங்கி,பூசணி,சுரைக்காய்,புடலங்காய்,நார்த்தை,மா,வாழை போன்ற காய்கனிகள் கிடைப்பதற்கு விதை போட்டு செடி, மரம் வளர்ப்பர்.
     இந்த விருட்சங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் காய்,கனிகளை உணவு பொருளாக உபயோகபடுத்தி வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தான் முற்கால வழக்கம். நிலம் இருப்பவர்கள் நெல் பயிரிடுவார்கள். நிலம் இல்லாதவர்கள் வயலில் வேலை செய்ததற்கு ஊதியமாக நெல்லை வாங்கி வந்து அதை அரிசியாக்கி, சமைத்து அதோடு வீட்டில் வளர்க்கும் செடிகளில் காய்த்த காய்கறிகளை பறித்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.
     பாரதியார் கூட காணி நிலம் வேண்டும்!என்று நிலம் தான் கேட்டார். அதில் கேணியுடன் தென்னை மரமும் வேண்டும் என்று வரம் கேட்டார். வள்ளுவர் கூட, உழவுத் தொழிலைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். உழுதவரின் பின்னால் மற்றவர் கை கட்டி தொழுது செல்வர்! என்றும் குறிப்பிடுகிறார்.
     ஆனால், இக்காலத்தில் நகர்ப்புறங்களில் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, வீடுகளாக மாறி வருகின்றன. காடு நகரமானால், நாடு நரகமாகும்என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் நாம் வீட்டில் காய்கறி தோட்டம் வைத்தால், உணவு உண்ண வாட்டமில்லை. எனவே தான் தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லைஎன்ற பழமொழியைச் சொல்லி வைத்தார்கள்.

நன்றி: தினத்தந்தி

Thursday, November 3, 2011

வீட்டு பொருட்கள் பராமரிப்பு.

தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லாத வீடு கிடையாது. அவற்றை ஒழுங்காக வைக்காவிட்டால் வீடு வீடாக இருக்காது. குப்பைககூளம் போல காட்சியளிக்கும். பர்னிச்சர்கள் முதல், பாத்திரங்கள் வரை எல்லாமே தட்டுமுட்டுச் சாமான்கள் தான். அவற்றை அடுக்கி வைத்திருந்தால் அழகு. அழுக்கு படியாமல் பாதுகாத்தால் அழகோ அழகு. சுகமும் கூட. இல்லாவிட்டால் வீட்டிற்கு வரும் விருந்தினர் முகம் சுளிப்பர். ஏன் நாம்கூட உற்சாகம் இழந்து விடுவோம்.

பர்னிச்சர்கள் பொலிவை இழப்பதற்கு கறை, விரிசல், சிராய்ப்பு என பல காரணங்கள் உண்டு. உணவு பொருட்கள் சிந்துவதால் பர்னிச்சர் அழகை இழக்கும். சாப்பிட்ட உடன் சிந்திய உணவு துணுக்குகளை துடைத்து விட்டால் சுத்தமாகி விடும். இல்லாவிட்டால் உறைந்து போய் கறையை ஏற்படுத்தலாம். காபி,டீ சிந்துவதாலும் கறை தோன்றலாம்.


பர்னிச்சர்களில் அன்றாடம் படிவது தூசுகள் தான். இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால் அவை அழுக்காக படிந்து விடும். அழுக்குகளை நீக்குவது எளிது தான் என்றாலும் தினசரி செய்ய முடியாததால் அவை பர்னிச்சர்களின் அழகை பாழாக்கும். அழுக்குகளை சுத்தம் செய்ய பாலிஷ், ஸ்ப்ரே தெளித்து சுத்தமான துணியால் பர்னிச்சர் முழுதும் துடைக்கவும்.

கரைகளை விட சிராய்ப்புகள் பர்னிச்சர்களின் அழகை அதிகமாக சிதைக்கிறது. குழந்தைகள் விளையாடுவது, பொருட்களை வைத்து எடுப்பது, இடம் பெயர்த்துவது போன்றவற்றால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது வினிகர் சேர்த்து பசை போல் ஆக்கி சிராய்ப்பில் பூசிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடுங்கள் சிராய்ப்பு மறைந்து விடும். மெழுகையும் தேய்க்கலாம்.

ஆழமான சிராய்ப்புகளை வாதுமை கொட்டைகளை கொண்டு சரி செய்யலாம். பள்ளத்தின் அளவுக்கேற்ப வாதுமை கொட்டையை நறுக்கி அதில் அழுத்திவிட்டு, சீராக உரசி விடுவதன் மூலம் சரிப்படுத்தி விடலாம். வெட்டுக்காயம்போல் ஏற்ப்பட்டுள்ள சேதங்களில் இன்ஸ்டன்ட் காபி பவுடரைசிறிது நீருடன் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்து பூசி சரி செய்யலாம். ஆனால் இது கருப்பு நிற பர்னிச்சர்களுக்குத்தான் நன்றாக இருக்கும்.

சேர்கள் நன்றாக இருந்தும் கால்கள் பழுதுபட்டால் பயனற்று போய் விடும். இருக்கையின் கால்கள் தேய்ந்து அல்லது உடைந்து போயிருந்தால் ரப்பர் தக்கையை அல்லது கடல்நுரையை பயன்படுத்தி நிற்க வைக்க முயற்சிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட வைக்கும் பசை கூட விற்பனைக்கு கிடைக்கிறது. அவற்றை வாங்கி உடைந்த துண்டுகளை அல்லது ரப்பர் தக்கைகளை ஒட்டி வைத்து பயன்படுத்தலாம்.

அடிக்கடி முற்றம் அல்லது தோட்டத்திற்கு எடுத்துச்சென்று பயன்படுத்தும் இருக்கையின் கால்கள் அதிகம் தேய்மானத்தை சந்திக்கும். அதன் கால்களில் சிறிய பிளாஸ்டிக் அல்லது தகர தக்கையை பொருத்தி தேய்மானத்தை குறைக்கலாம். இதனால் சேர்களை இழுத்துக்கொண்டு சென்றாலும் ஒன்றும் ஆகாது. பாலிஷ் செய்யும்போது கீழே பழைய சாக்கை விரித்துக் கொண்டால் வடியும் வார்னிஷை உறிஞ்சி விடும்.

சேர்கள் சுவர் ஓரமாக போடப்பட்டு இருக்கும்போது சுவரில் உரசலாம். அதேபோல அதில் அமருபவர்கள் சுவரில் சாய்வதால் எண்ணெய் கறை சுவரில் படியலாம். இதை தவிர்க்க ரப்பர் மெத்தைகளை வாங்கி தலைசாயும் இடம், இருக்கைகள் சுவரில் உரசும் பகுதிகளில் பொருத்தலாம். பர்னிச்சர் பாலிஷை அகற்ற வினிகருடன் பாதியளவு தண்ணீர் சேர்த்து துடைக்கவும்.




.

Sunday, January 16, 2011

ரவைப் பணியாரம்




(Rava Paniyaaram)

தேவையானவை:


ரவை - 500 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
வாழைப்பழம் - 1
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - 1/2 தே.கரண்டி
சமையல் சோடா -  1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:

1. முதலில் தேங்காயை அரைத்து முதல் பால் எடுத்து ரவையில் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. மீதமுள்ள அரைத்த தேங்காயை வைத்து இரண்டாவது பால் சிறிது எடுத்து கொள்ளவும்.
3. பிறகு சர்க்கரை மற்றும் வாழைப்பழம், இவற்றுடன் சிறிது இரண்டாவது எடுத்த பாலை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து ஊறிய ரவையில் ஊற்றவும்.
4. அதில் சமையல் சோடா மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும்.
5. சர்க்கரை வாழைப்பழ கலவையை கலந்தவுடன் மாவு சிறிது நீர்த்து விடும். அதனால் மேலும் சிறிது ரவை சேர்த்து கட்டி விழாமல் சிறது கெட்டியாகும் வரை கலக்கவும். எண்ணையில் எடுத்து போடும் அளவுக்கு பதம் இருக்க வேண்டும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விட்டு, சிறு சிறு பிடியாக எடுத்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.